தினம் ஒரு பாசுரம் - 75
தினம் ஒரு பாசுரம் - 75
அடியேன் உள்ளான் உடல் உள்ளான்
அண்டத்து அகத்தான் புறத்துள்ளான்
படியே இது என்று உரைக்கலாம்
படியன் அல்லன் பரம் பரன்!
கடிசேர் நாற்றத்துள் ஆலை
இன்பத் துன்பக் கழி நேர்மை
ஒடியா இன்பப் பெருமையோன்
உணர்வில் உம்பர் ஒருவனே
--- திருவாய்மொழி (நம்மாழ்வார்)
என் நண்பர் சுஜாதா தேசிகன் ”நான் இராமானுசன் புத்தகத்தை முன் வைத்து...” (http://sujathadesikan.blogspot.in/2016/06/blog-post_14.html) என்ற இடுகையில் இந்தப் பாசுரம் பற்றிக் குறிப்பிட்டிருந்தார், அதில் கிட்டிய உந்துதலால், ‘தினம் ஒரு பாசுரம் - 75” உருவானது இன்று :-)
பாசுரப் பொருள்:
அடியேன் உள்ளான் - (என்) ஆன்மாவில் (கலந்து) இருப்பவனும்
உடல் உள்ளான் - (என்) தேகத்திலும் இருப்பவனும்
அண்டத்து அகத்தான் - அண்டத்து உயிர்கள் அனைத்தின் உள்ளும் இருப்பவனும்
புறத்துள்ளான் - அவற்றுக்கு வெளியிலும் உறைபவனும்
படியே இது - (அவன்) குணநலன்கள் இவையே
என்று உரைக்கலாம் - என்று (நாம்) கூறினாலும்
படியன் அல்லன் - (என்றும் நமது வரையறைக்கு) உட்படாதவனும்
பரம் பரன்! - (திருமால் எனும்) முழுமுதற்கடவுளும்
கடி சேர் - மிகுந்த / உவப்பளிக்கும்
நாற்றத்துள் ஆலை - வாசனை உடைய கருப்பஞ்சாறு போன்றவனும்
இன்பத் துன்பக் கழி - இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்ட
நேர்மை - நுண்மை மிக்கவனும்
ஒடியா - குறைக்க/மாற்ற முடியாத
இன்பப் பெருமையோன் - ஆனந்த மயமானவன் / பேருவகை அளிக்க வல்லவன் /அருள் ஓளி வடிவானவனும்
உணர்வில் உம்பர் - ஞானத்தில் மிக உயர்ந்து நிற்பவனும்
ஒருவனே - ஒருவனே!!!
பாசுர உள்ளுரை:
அடியேன் உள்ளான் உடல் உள்ளான்
அண்டத்து அகத்தான் புறத்துள்ளான்
அடியேன் என்பது உடலை வாகனமாகக் கொண்ட ஆன்மாவைக் குறிக்கிறது என்று கொள்வதே தகும். அதனால் தான், காரிமாறப்பிரான், தொடர்ந்து “உடல் உள்ளான்” என்று உடம்பைத் தனியாகக் குறிக்கிறார். இது தவிர, இதற்கு பல எடுத்துக்காட்டுகள் தரலாம். திருவிருத்தத்தில் நம்மாழ்வார் பாசுரம் அருளத் தொடங்கும்போதே "அடியேன் செய்யும் விண்ணப்பமே" என்றே தொடங்குகிறார்.
”அடியேன் உள்ளான்” என்பதற்கு 3 விதமாக பொருள் கொள்ளலாம். ஒன்று, “என் ஆன்மாவில் பரமன் மேவி இருப்பதால், எனது ஞானம், கர்மம் என்பவை அவனைச் சார்ந்தவையே, அவற்றுக்கு தனிப்போக்கு என்று ஒன்றில்லை”. இரண்டாவது, ஒருமைப் பிரயோகத்தின் வாயிலாக, ஆழ்வார் தனது ஆன்மாவையே குறிப்பதால், ஜீவாத்மாக்களுக்கு இடையே உள்ள ஆன்ம பேதம் சொல்லப்பட்டிருப்பதாகக் கொள்வதும் தகும். மூன்றாவது, ஒரு ஜீவாத்மாவின் ஞானத்திற்குப் பயன் என்பது தன் சேஷத்வத்தை (தொண்டுக்குரிய ஞானத்தெளிவு/ சரணாகதித்துவ மேன்மை அறிதல்) உணர்வது எனலாம். மூன்றாவது எம்பெருமானாரே அருளியது.
“அண்டத்து அகத்தான்” என்று சகல உயிர்களிலும் அந்த பரமாத்மா உறைந்திருக்கையில், பேதம் எங்ஙனம் என்ற கேள்வி எழும். ஆனால், ஆன்ம வழி ஜீவ-ஜீவ பேதத்தை உறுதிப்படுத்தவே ஆழ்வார் இவ்வாறு அருளினார்!! நடுவில் “உடல் உள்ளான்” என்றும் அருளியிருக்கறார் அல்லவா “நம்” ஆழ்வார் :-) அதாவது, எல்லா ஆன்மாக்களுக்கும் ஒரே வகையான அனுபவம் (இறை அனுபவத்தையும் சேர்த்தேச் சொல்கிறேன்) கிட்டுவதில்லை! இவ்வுலகில் ஆன்மா தனியாக இயங்குவதில்லை, உடல் என்ற வாகனத்தின் பாதையோடு பிணைந்தது தான் ஆன்மாவின் பயணமும்.
திருக்குருகைப்பிரான் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு ஒன்றை மீண்டும் நினைவு கூர விரும்புகிறேன். பின்னாளில் நம்மாழ்வாருக்கு சீடரான மதுரகவியார், ஆழ்வாரை முதலில் சந்தித்தபோது "செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?" என்ற கேள்வியை வீச, கண் திறந்த ஆழ்வார், "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்று பதில் அருளினார். இந்த கேள்வி பதிலுக்கான உட்பொருள் ஆழமானது.
இங்கே செத்தது என்பது உடல், சிறியது என்பது உயிர் (அ) ஆன்மா எளிமையாக விளக்க வேண்டுமென்றால், பிறப்பின் போது, ஒரு ஆன்மா எந்த வகையான உடலுள் புகுகிறதோ அவ்வுடலுக்கேற்ப அதன் தோற்றத்திற்கேற்பவே சுக துக்கங்களை அடைய முடியும் என்றும், மெய்ஞ்ஞானத்தை உணர்வதில் உடலெனும் கூடுக்கும் பங்கிருக்கிறது என்ற செய்தியும் இதில் பொதிந்திருப்பதாகக் கொள்ளலாம்! ஆக, ஆன்மா உய்வுற (பரமபதம்) ஒரு பிறப்பே போதுமானதாகவும் இருக்கலாம், பல பிறப்புகளும் தேவைப்படலாம். ஆக, ஜீவன்களிடையே ஆன்ம பேதம் இருக்கிறதல்லவா!
”அடியேன் உள்ளான் அண்டத்து அகத்தான்” வாயிலாக, அனைத்து ஜீவாத்மாக்களும் சுட்டப்பட்டது. “உடல் உள்ளான்” என்பதை பரம்பொருளானது, உயிரில்லாப் பொருள்களிலும் மேவி இருப்பதாகக் கொள்ளலாம். “புறத்து(மு)ள்ளான்” என்பதால், அவனே ஈஸ்வரன் (பரம்பொருள்). ஆக, எம்பெருமானார் தரிசனம் என்று போற்றப்படும் விசிஷ்டாத்வைதம் சொல்லும் தத்துவக்கோட்பாட்டை (சித்(ஆத்மா) அசித்(ஜடப்பொருள்) ஈஸ்வரன்(பெருமாள்)) “நம்” ஆழ்வார் மிக எளிமையாக 2 வரிகளில் அருளி விடுகிறார். அது மட்டுமன்றி, பர-ஜீவ பேதத்தையும், ஜீவாத்மாக்களுக்கு இடையே ஆன பேதத்தையும் ஆழ்வார் நமக்கு எளிமையாக உணர்த்தியிருக்கிறார்.
அனைத்திலும் பரம்பொருள் உறைந்திருப்பதாலேயே, பரமாத்மாவும், ஜீவாத்மாவும் ஒன்று என்று கூறவியலாது. அதனால் தான், எம்பெருமானாரின் சித்தாந்தமான விசிஷ்டாத்வைதம், ஆதிசங்கரின் அத்வைதத்திலிருந்து மாறுபடுகிறது.
மேலும், “புறத்துள்ளான்” என்பது அண்டத்தில் இருக்கும் உயிர், உயிரில்லா என்று எல்லாப் பொருட்களுக்கு வெளியேயும் பரமாத்மா விரவி இருப்பதைக் குறிக்கிறது. பஞ்சபூதங்களில் வியாபித்து நிற்கிறான் அந்தப் பரந்தாமன். அதனால் தான் அவன் “All Pervading". எல்லாவற்றுக்கும் அந்தராத்மாவும் கூட! ”அண்டத்து புறத்துள்ளான்” என்று சேர்த்தால், அப்பரமன் Parallel Universe-லும் இருப்பதாக எடுத்துக் கொள்ளலாம் தானே :-)
படியன் அல்லன் பரம் பரன் -
தெரிதல் நினைதல் எண்ணல் ஆகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
என்று நம்மாழ்வரே இன்னொரு பாசுரத்தில் இதையேத் தான் அருளுகிறார்!
பரம்பரன் - பரம்பொருள் வடிவம், பரஞ்சோதி (The Supreme Deity)
ஆலை - கரும்பாலை; கரும்பு; கள்; தேன்; கூடம்; யானைக்கூடம்; நீராரை; ஒருவகைக்கிட்டித்tதண்டனை என்ற பொருள்களும் உண்டு
கழி - அண்ட முடியாத என்ற பொருளும் கொள்ளலாம்.
ஒடியா - நிரந்தரமான
--- எ.அ.பாலா